சதாகாலமும் நிலைத்திருக்கும் அன்பு
தினமும் யாராவது ஒருவராவது நம்மை ஒரு பொருட்டாக மதிக்காமல் அலட்சியப்படுத்தி நடந்துகொள்ளக்கூடும். சில நேரங்களில் நாமே நம்மை அப்படித் தான் நடத்திக்கொள்வோம்.
தாவீதின் எதிரிகள் அவனை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தனர். வார்த்தைகளால் அவனை அதட்டி, மிரட்டி, அச்சுறுத்தி அவமானப்படுத்தி வந்தனர். அவனுடைய சுயமரியாதையை நிர்மூலமாக்கும் விதத்தில் அவனைத் தாக்கினர், அதனால் அவனது சுயமதிப்பு வீழ்ச்சியடைந்தது (சங். 4:1-2). அதை தாங்கமுடியாமல் “இந்த துயரத்தில் இருந்து என்னை மீட்டருளும்” என்று தேவனிடம் மன்றாடுகிறான்.
“பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்” என்ற வார்த்தையை தாவீது நினைவுகூர்ந்தான். “உண்மையுள்ள ஊழியக்காரன்” என்ற தாவீதின் தைரியமான அறிக்கையை நிறைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் “தெய்வபக்தியுடையவன்” என்று சொல்வதுண்டு. இங்கே இடம்பெற்றுள்ள எபிரேய வார்த்தை ‘ஹெசெத்’ (hesed) என்பதாகும். அது தேவனுடன் பண்ணப்பட்ட உடன்படிக்கையின் அன்பை குறிக்கின்றது. அப்படியானால், அந்த பதத்தை இவ்வாறு மொழிபெயர்க்கவேண்டும் – “யாரை தேவன் என்றென்றும் சதாகாலங்களிலும் எப்பொழுதும் நேசிக்கின்றாரோ”.
இதைத்தான் நாமும் நினைவில் கொள்ளவேண்டும்: தேவன் தமது சொந்தகுமாரனை நேசித்தது போல நம்மையும் விசேஷித்த விதத்தில் பிரித்தெடுத்து என்றென்றும் நேசிக்கின்றார். நித்தியத்திற்கும் தமது பிள்ளையாய் ஜீவிக்கும்படி நம்மை பெயர் சொல்லி அழைத்திருக்கின்றார்.
ஆகவே, நம்பிக்கையை இழந்துவிடாமல், தேவன் நம்மீது பொழியும் இலவச அன்பை நினைவுகூர்ந்து மகிழ்ந்திடுவோமாக. நாம் அவரது பிரியமான பிள்ளைகள். ஆகவே நாம் விரக்தி அடைய தேவையில்லை, சமாதானமும் மகிழ்ச்சியும் பாய்ந்தோட, முடிவு சம் பூரணமாய் இருக்கும் (வச-7-8). அவர் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை விட்டுக் கொடுத்துவிட மாட்டார். அவர் நம்மேல் அன்பு செலுத்துவதை நிறுத்துவதேயில்லை.
விடியல் வரும் பொழுது
மிகவும் தாமதமானபடியால் இரவில் முனிச் (Munich) நகரின் வெளியே இருந்த ஓர் விடுதியில் தங்க நாங்கள் முடிவெடுத்தோம். கடும் மூடுபனியினால் வெளியே எதையும் காணமுடியாவிட்டாலும், எங்களது வசதியான அறையில் ஓர் பால்கனி இருந்ததைக் கண்டு நாங்கள் உற்சாகமடைந்தோம். காலையில் சூரியன் உதிக்கத் தொடங்கியவுடன், பனியும் விலக ஆரம்பித்தது. எங்களது கண்களுக்கு மறைக்கப்பட்டிருந்த அற்புதமான காட்சியை அப்போதுதான் கண்டோம். மெல்லிய சத்தத்தை உண்டுபண்ணும் சிறிய மணிகளை அணிந்திருந்த ஆடுகள் பசுமையான புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தன. அண்ணாந்து பார்த்தால் பெரிய வெண்மேகங்கள் மிதந்து கொண்டிருந்தது. காற்றடைத்த வெண் பஞ்சினாலான பெரிய ஆடுகள் போன்று அவை தோற்றமளித்தது!
சில நேரங்களில் விரக்தி, மூடுபனிபோல் நம்மை சூழ்ந்து கொள்ளலாம். நமது நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருப்பதை கண்டு நாம் நம்பிக்கையை இழக்க நேரிடலாம். ஆனால் சூரியனின் வரவு மூடுபனியை விலக்கியது போல, தேவன் மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம், சந்தேகத்தை நம்மை விட்டு விலக்கி விடும். விசுவாசம் என்பது “நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமாயிருக்கிறது” என்று எபிரெயர் 11ல் சொல்லப்பட்டிருக்கின்றது (வச. 1). அந்த அதிகாரத்தைத் தொடர்ந்து வாசித்தால், நோவாவின் விசுவாசத்தைப் பற்றிக் காணலாம். அவர், “தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப் பெற்றார்”. எனினும் அவர் தேவனுக்கு கீழ்படிந்தார் (வச. 7). எங்கே போகிறோம் என்பது தெரியாத போதிலும், ஆபிரகாமும் தேவன் சொன்ன இடத்தை நோக்கி சென்றார் (வச. 8).
அவரை நாம் காணாதபோதிலும், அவரது பிரசன்னத்தை உணர முடியாத தருணங்களிலும் தேவன் எப்போதும் நம்மோடு இருந்து இருண்ட காலத்தை கடந்துவர உதவிடுவார்.
கோபத்திற்கு ஓர் மாற்று
ஓரு நாள் காலை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் (Perth) வசித்து வரும் பியோன் முல்ஹோலாந்த் (Fionn Mulholland) என்பவருடைய கார் காணமல் போனது. தடை செய்யப் பட்ட இடத்தில் அவரது காரை நிறுத்தி இருந்தது நினைவுக்கு வந்தவுடன், அவரது காரை அதிகாரிகள் எடுத்து சென்றிருப்பார்கள் என்பதை புரிந்துகொண்டார். காரை எடுத்து சென்றதற்கான $600 தொகையையும், அபராதத் தொகையையும் எண்ணியவுடன் முல்ஹோலாந்த் விரக்தியடைந்தார். ஆனால் காரை மீட்கும்பொழுது தான் சந்திக்க போகும் நபர் மேல் கோபம் கொள்ளக்கூடாது என்று மனதில் முடிவெடுத்தார். அவரது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல், முல்ஹோலாந்த் அந்த சம்பவத்தை பற்றி ஓர் வேடிக்கையான கவிதையை எழுதினார். காரை வைத்திருந்த இடத்தில் வேலை செய்த ஒருவரிடம் அதை வாசித்தும் காண்பித்தார். வேலை பார்த்தவருக்கு அந்த கவிதை பிடித்துப்போனது, அதன் வாயிலாக கசப்பான சம்பவமாக மாறக்கூடிய ஓர் நிகழ்வு தவிர்க்கப்பட்டது.
“வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை” (20:3) என்று நீதிமொழிகள் நமக்கு கற்றுத்தருகின்றது. இரண்டு பேருக்கு நடுவே கருத்து வேறுபாடு இருக்கும்போது, அவர்கள் மத்தியில் வழக்காடுதல் இருந்துகொண்டே இருக்கும். விவாதம் செய்யும்போது கோபம் வெளியரங்கமாய் வெளிப்படாமல் உள்ளுக்குள் கொந்தளித்துக்கொண்டேயிருக்கும். சில நேரங்களில் அது காட்டாற்று வெள்ளம் போல் வெடித்து கிளம்பும்.
நாம் மற்றவரோடு சமாதானத்துடன் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் தேவன் நம்மிடம் கொடுத்துள்ளார். கோபத்தை உணரலாம் ஆனால் அது கடும் சினமாக உருமாறத் தேவையில்லை என்பதை அவரது வார்த்தை நமக்கு உறுதியளிக்கின்றது (எபே. 4:26). நம்மை வருத்தப்படுத்துவோரைக் காணும்போது, கோபத்தில் சீறிப்பாய்ந்து வார்த்தைகளாலோ செயல்களாலோ அவர்களை தாக்குவோம். ஆனால் ஆவியானவர் நம்மோடு இருந்து அப்படிப்பட்ட எண்ணங்கள் நம்மை மேற்கொள்ளாதபடி நமக்கு உதவி செய்வார். எரிச்சலைத் தூண்டும் காரியங்களை நாம் சந்திக்கும்போது தேவன் அவரையே நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக தந்துள்ளார் (1 பேது. 2:23). அவர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையுமுள்ள தேவன் (சங். 86:15).
மொழியை கற்றுக்கொள்தல்
ஜமைக்காவின் (Jamaica) ஓர் சிறுசபை கூட்டத்தில் அம்மக்களின் வட்டார மொழியில் “வாஹ் கவான் ஜாமைக்கா?” என்று கூறினேன். அப்பொழுது நான் எதிர்பார்த்ததைவிட சிரிப்போடு, கைதட்டலோடும் கூடிய நல்ல வரவேற்பு எனக்கு கிடைத்தது.
நிஜத்தில், “என்ன நடந்து கொண்டிருகின்றது?” என்று பாத்வைஸ் மொழியில் நான் கேட்டது சாதாரணமான வாழ்த்துரைதான், ஆனால், “நான் உங்கள் மொழியை பேசுவதில் அதிக கரிசனையுள்ளவனாயிருக்கின்றேன்” என்பதுதான் அவர்களது காதுகளில் விழுந்தது. அதற்கு மேல் பாத்வைஸ்யில் பேச என்னால் முடியவில்லை, ஆயினும் ஓர் சிறிய கதவு திறக்கப்பட்டிருந்தது.
அபோஸ்தலனாகிய பவுல் ஏதென்ஸ் மக்களின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அவர்களது கலாச்சாரத்தை நன்கு அறிந்திருந்தார் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தார். “அறியப்படாத தேவனுக்கு” அவர்கள் வைத்திருந்த ஓர் பலிபீடத்தை பற்றி பேசியும், அவர்களது கவிஞர் கூறியிருந்த கருத்துக்களை மேற்கோள் காட்டியும் அவர்களது கவனத்தை ஈர்த்தார். பவுல் கொண்டுவந்த இயேசுவின் உயிர்த்தெலுதலை பற்றிய செய்தியை எல்லோரும் நம்பிவிடவில்லை. ஆனால், “நீர் சொல்வதைப் பற்றி மீண்டும் நாங்கள் கேட்கவேண்டும்” என்று சிலர் கூறினர் (அப். 17:32).
இயேசு தரும் இரட்சிப்பைப் பற்றி நாம் மற்றவருடன் பேசும்போது, மற்றவர்களுடைய வாழ்வில் நம்மையே நாம் முதலீடு செய்யவேண்டும். அவர்களது மொழியை நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நற்செய்தியை பகிர்ந்துகொள்ள அதுவே நல்ல வாசலாய் அமையும் (1 கொரி. 9:2௦-23 யை பார்க்கவும்).
மற்றவரிடம் “வாஹ் கவான்” என்பதை கேட்டு அறிந்துகொள்ளும்போது, தேவன் நமது வாழ்வில் செய்த காரியங்களை எளிதில் பகிர்ந்துகொள்ள முடியும்.
அன்பின் தொடுதல்
இறுக்கமான தருணத்தின் முடிவில் மனதை உருக்குகிற ஒரு காட்சியைக் கனடாவின் மெட்ரோ ரயில் பயணிகள் கண்டனர். உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்த ஓரு வாலிபனின் செயல்கள் பயணிகளை வெகுவாகப் பயமுறுத்தியது. அப்போது 7௦வயதுள்ள ஓர் பெண்மணி கனிவாக தன் கரத்தை அவனிடம் நீட்டுவதை அவர்கள் கண்டனர். அந்த பெண்ணின் இரக்கத்தைக் கண்டு அந்த மனிதன் ரயிலின் தரையில் கண்ணீர் மல்க அமர்ந்தான். பின்னர் எழுந்து நின்று, “நன்றி பாட்டி,” என்று அவன் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான். “நான் ஓர் தாய், அந்த மனிதனுக்கு ஓர் அன்பின் தொடுதல் தேவைப்பட்டதை நான் உணர்ந்தேன். ஆகவே அவ்வாறு செய்தேன்.” பயம் இருந்தபோதிலும் ஏன் அவ்வாறு செயல்பட்டார் என்பதை அந்த பெண்மணி விளக்கினார். அறிவுசார்ந்த ஆலோசனை அவரை தள்ளி இருக்கவே சொல்லியிருக்கும். ஆனாலும் அவர் அன்பினால் உந்தப்பட்டு அபாயகரமான காரியத்தைத் துணிவுடன் செய்தார்.
இயேசு இப்படிப்பட்டதான இரக்கத்தை நன்கறிவார். குணமடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தன்னை நோக்கிவந்த குஷ்டரோகியைக் கண்டு பதட்டமடைந்த பார்வை யாளர்களின் பயத்தை அவர் அங்கீகரிக்கவில்லை. ஆதரவு எதுவும் தராமல், கிராமத்திற்குள் வந்ததற்காக கண்டனத்தை மாத்திரம் தரும் நிலையில் இருந்த மற்ற மத்த தலைவர்களை போல் உதவி செய்யமுடியாத நிலையிலும் அவரில்லை (லேவி. 13:45-46). இயேசு தீண்டத்தகாதவனாக வாழ்ந்துவந்த அவனிடம் தன் கைகளை நீட்டி, தொட்டு குணமாக்கினார்.
எந்த ஒரு சட்டத்தாலும் தரமுடியாத ஒன்றை, அந்த மனிதனுக்காகவும் நமக்காகவும் இயேசு தர வந்தார். அவருடைய இருதயம் மற்றும் கரத்தின் தொடுதல்தான் அது.
மன தைரியத்தை விட்டு விடாதீர்கள்
50 வருடங்களுக்கும் மேலாக எனது நண்பரும் வழிகாட்டியுமாகவிருந்த பாப் போஸ்டர் (Bob Foster) என் மீதுள்ள நம்பிக்கையை தளர்த்தவேயில்லை. என் வாழ்வின் இருண்ட காலக்கட்டத்தில், அவரது மாறாத நட்பும், ஊக்குவித்தலும்தான் என்னை பலப்படுத்தியது.
அதிகமான தேவையுடன் இருக்கும் சிலரைப் பார்த்தவுடன், அவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்யவேண்டும் என்ற திடமான எண்ணத்துடன் நாம் உதவிக் கரத்தை நீட்டுவோம். ஆனால் உடனடியாக எந்த மாற்றத்தையும் நாம் காணாதபோது, நமது தீர்க்கமான எண்ணம் சற்றே தளர்வடைய ஆரம்பிக்கும், பின்னர் அந்த எண்ணத்தை கைவிட்டுவிடுவோம். உடனடியான மாற்றத்தை எதிர்பார்த்த நமக்கு அது ஓர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்முறை என்பது அப்போதுதான் விளங்க ஆரம்பிக்கும்.
வாழ்வின் தடுமாற்றங்களையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கும்போது பொறுமையுடன் உடன் ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும் என்று அபோஸ்தலனாகிய பவுல் சொல்கிறார். “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்” (கலா. 6:2) என்று பவுல் கூறும்பொழுது விதை விதைத்து, வேலைசெய்து, அறுவடைக்கு காத்திருக்கும் விவசாயியுடன் நமது வாழ்வை ஒப்பிடுகிறார்.
எவ்வளவு நாள்தான் நாம் இவ்வாறு ஜெபித்து நேசக்கரத்தை நீடிக்கொண்டிருப்பது? “நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம் (கலா: 6:9). எத்தனை தரம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம் (கலா. 6:10).
பிறருக்காக ஜெபித்து, அவர்களிடம் உண்மையுள்ளவர்களாயிருந்து, நம்பிக்கையை விட்டு விடாமலிருக்க அவர் மீது நம்பிக்கை வைக்குமாறு தேவன் நம்மை இன்றைக்கு உற்சாகப் படுத்துகிறார்.
சிறிய காரியங்கள்
எனது தோழி க்ளோரியா (Gloria) உற்சாகத்துடன் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். மருத்துவரை சந்திக்க மட்டுமே அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த காலமது, “என்னுடைய மகன் எனது கணிப்பொறியில் புதிய ஒலிபெருக்கிகளை பொருத்தியுள்ளான், ஆகவே இப்பொழுது என்னால் சபைக்கு செல்லமுடியும்!” என்று சொன்னவரின் குதூகலத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரது சபையில் நடைபெறும் ஆராதனையில் அவரும் அதே நேரத்தில் இனிமேல் பங்கு பெறலாம். “இதை விட நல்ல பரிசை எனது மகனால் தந்திருக்க முடியாது” என்று தேவனுடைய நன்மையை குறித்தும் தனது மகனின் செய்கையை பற்றியும் ஆவலுடன் பேசிவந்தார்.
நன்றியுள்ள இருதயத்தின் அவசியத்தை க்ளோரியா எனக்கு கற்றுத் தந்தார். பலவிதமான வரம்புகளுக்குள் வாழ்ந்தபோதிலும், வாழ்வின் சிறிய காரியங்களுக்கும் அவர் நன்றியுள்ளவராய் இருக்கின்றார். சூரிய அஸ்தமனத்திற்க்கும், அன்புடன் உதவி செய்யும் உற்றார் மற்றும் உறவினர்க்கும், தேவனுடன் செலவிடும் அமைதியான தருணங்களுக்கும் தன் வீட்டில் தனியாக சமாளிக்கக்கூடிய பெலத்திற்காகவும் அவர் நன்றியுடன் இருகின்றார். வாழ்நாள் முழுவதும் தேவனின் இரக்கத்தை பார்த்து வந்தவர் அவர். ஆகவே, தொலைபேசியில் அழைப்போரிடமும் அவரை சந்திக்க வருவோரிடமும் தேவனின் ஈவை பற்றி சொல்லிக்கொண்டே இருப்பார்.
சங்கீதம் 116ஐ எழுதியவர் என்ன பிரச்சனைகளைச் சந்தித்துவந்தார் என்பதை நாமறியோம். “மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது” (வச-3) என்பதை கருத்தில் கொண்டு, வியாதியினால் அவதிபட்டுகொண்டிருந்தார் என்று சில வேதாகம விளக்கவுரையாளர்கள் சொல்வ துண்டு. “தாம் தாழ்வுற்ற” நிலையிலும், தேவனுடைய இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் நன்றி தெரிவித்து வந்தார். (வச. 5–6)
தாழ்ந்த நிலையில் இருக்கும்போது, கண்களை ஏறெடுத்து மேலே பார்ப்பது கடினம்தான். ஆனால், அவ்வாறு செய்யும்போது, சிறிதோ பெரிதோ, சகலவிதமான நன்மையான ஈவு களையும் தேவன்தான் நமக்கு தந்து வருகிறார் என்பதை நாம் அறிந்துகொண்டால் நன்றி பலிகளை ஏறெடுக்க தொடங்குவோம்.
சுருங்கும் பியானோ
தொடர்ச்சியாக மூன்று வருடங்களாய் எனது மகன் ஒரு பியானோ கச்சேரியில் பங்கேற்று வந்தான். கடைசி வருடத்தில் அவன் பங்குபெற்றபோது படிகளில் ஏறி, பியானோவை தனது இசைக்கேற்றவாறு சரிசெய்ததை நான் கவனித்தேன். பின்பு, இரண்டு பாடல்களை அவன் வாசித்துவிட்டு என் பக்கத்தில் வந்து அமர்ந்து, “அம்மா, இந்த வருடம் பியானோ மிகவும் சிறிதாக இருந்தது,” என்று இரகசியமாக்க கூறினான். “அப்படி ஒன்றும் இல்லை, சென்ற வருடம் நீ வாசித்த அதே பியானோதான் அது. இப்போது நீ பெரியவனாகிவிடாய்! நீ வளர்ந்துவிட்டாய்!” என்று அவனது சந்தேகத்தை தீர்த்து வைத்தேன்.
ஆவிக்குரிய வளர்ச்சியும், சரீர வளர்ச்சியைப் போன்றதுதான். மெதுவாகத்தான் மாற்றங்களைக் காணமுடியும். இயேசுவை போல் நாம் மாறிக்கொண்டு வருவது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஓர் செயல்முறையாகும். நமது மனம் புதிதடைவதற்கு ஏற்றவாறு நாமும் மறுரூபமடைந்து வருகிறோம் (ரோ. 12:2).
ஆவியானவர், நமக்குள் வேலை செய்ய ஆரம்பித்தவுடன், நம் வாழ்விலிருக்கும் பாவத்தினை நாம் உணர ஆரம்பிப்போம். தேவனுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், நாமும் மாறுவதற்கு முயற்சிகளை எடுப்போம். சில நேரங்களில் வெற்றியைச் சுவைப்போம், ஆனால் பல நேரங்களில், நமது முயற்சி தோல்வியை தழுவும். ஒன்றுமே மாறாதபோது, நாம் சோர்வடைந்துவிடுவோம். தோல்வியை கண்டவுடன் எந்த முன்னேற்றமும் அடைய வில்லை என்று தவறாக எண்ணிவிடுவோம். ஆனால், சரியாக இயங்கிக்கொண்டிருக்கும் செயல்முறைக்குள் நாம் இருக்கின்றோம் என்பதைத் தான் அது வெளிபடுத்துகின்றது.
ஆவியானவரின் துணையும், நமது உறுதியான தீர்மானமும், போதுமான நேரமும்தான் நல்ல ஆவிக்குரிய வளர்ச்சியை நிர்ணயிக்கும் காரியங்களாகும். நமது வாழ்வின் முக்கியமான சில தருணங்களை நாம் திரும்பிப்பார்க்கும்போது, நாம் எவ்வாறு ஆவிக்குரிய விதத்தில் வளர்ந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளலாம். “உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று” (பிலி. 1:6) என்பதை நாம் நம்பி ஜீவிக்கும்படியாகவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படியாகவும் தேவன் நமக்கு உதவி செய்வாராக.
எப்பொழுதும் கேட்டுக்கொண்டிருக்கிறார்
என்னுடைய தந்தை அதிகமாகப் பேசமாட்டார். இராணுவத்தில் வேலை செய்ததினால் அவருக்கு காது சரியாக கேட்காமல், காதுகேட்கும் கருவியை உபயோகித்து வந்தார். ஓர் மத்தியான வேளையில், நானும் எனது தாயாரும் அளவுக்கதிகமாய் பேசிவிட்டது போல் உணர்ந்த அவர், விளையாட்டாய் “எப்போதெல்லாம் எனக்கு அமைதியும் சமாதானமும் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஒரே ஒரு காரியத்தை நான் செய்தால் போதும்” என்று சொல்லி இரண்டு கைகளையும் உயர்த்தி, அவரது காதில் இருந்த கேட்கும் கருவிகளை எடுத்துவிட்டு, கைகளை தன் தலையின் பின்னால் கட்டிக்கொண்டு, கண்களை மூடி அமைதியாக புன்னகைத்தார்.
நாங்கள் சிரித்தோம். அவரைப் பொறுத்தமட்டில் கலந்துரையாடல் முடிவடைந்துவிட்டது!
எனது தந்தையின் செய்கைகள் தேவனுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசத்தை நன்றாக உணர்த்தியது. தேவன் எப்போதும் தமது பிள்ளைகளின் குரலை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறார். வேதத்தில் இருக்கும் மிகச் சிறிய ஜெபமே இதற்கு உதாரணமாகும். பெர்சியா ராஜாவாகிய அர்தசஷ்டாவின் ஊழியக்காரனான நெகேமியா, ராஜாவின் சந்நிதானத்தில் ஒரு நாள் கவலையுடன் காணப்பட்டான். ஏன் என்று கேட்ட ராஜாவிடம், தனது முன்னோர்களின் பட்டணமாகிய எருசலேம் பாழடைந்து கிடப்பதை குறித்த கவலையை பயத்துடன் எடுத்துரைத்தான் - “அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: ‘நீ கேட்கின்ற காரியம் என்ன என்றார்’. அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி; ராஜாவைப் பார்த்து......” (நெகே. 2:4–5).
நெகேமியாவின் ஜெபம் நொடிப்பொழுதில் முடிவடைந்துவிட்டது. ஆனால் தேவன் அதை கேட்டார். எருசலேமை குறித்து நெகேமியா ஏற்கனவே ஜெபித்துவிட்டார். அவர் செய்த அனைத்து ஜெபங்களுக்கும் தேவன் வைத்திருந்த இரக்கமுள்ள பதிலை அந்த சிறிய ஜெபம் பெற்றுத்தர ஆரம்பித்தது. அந்த தருணத்தில், பட்டணத்தை சீரமைக்க வேண்டும் என்ற நெகேமியாவின் விண்ணப்பத்திற்கு அர்தசஷ்டா உடனடியாக பதில் கொடுத்தார்.
மிகச் சிறிய ஜெபத்திலிருந்து மிக நீளமான ஜெபம் வரை – நம்முடைய எல்லா ஜெபத்தினையும் தேவன் கரிசனையுடன் கேட்கின்றார் என்பதை அறியும்போது எவ்வளவு ஆறுதலாய் இருகின்றதல்லவா?